மகனை கொன்று பிணம் வாய்க்காலில் வீச்சு; மாயமானதாக நாடகமாடிய தந்தை கைது

கோபி அருகே மகனை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசிவிட்டு மாயமானதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தகராறு செய்ததால் கொன்றதாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2022-04-26 15:12 GMT
கோபி அருகே மகனை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசிவிட்டு மாயமானதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்தனர். பணம் கேட்டு தகராறு செய்ததால் கொன்றதாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாயம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள திங்களூர் நிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 76). விவசாயி. அவருடைய மனைவி பாவாயாள். இவர்களுடைய ஒரே மகன் பெரியசாமி (42). திருமணம் ஆகாதவர். பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த பெரியசாமியை காணவில்லை. இதுகுறித்து காளியப்பன் திங்களூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில் அவர், தனது மகன் பெரியசாமியை காணவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சாக்குமூட்டையில் பிணம்
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியசாமி வீடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் சாக்குமூட்டை மிதந்து கொண்டிருந்தது. மேலும் சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
 இதுபற்றி  திங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் இருந்தது.
இதனால் போலீசார் அது காணாமல் போன பெரியசாமியாக இருக்கலாம் என கருதி, அவரது தந்தை காளியப்பனை அழைத்து சென்று அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர் பிணத்தை பார்த்துவிட்டு சாக்குமூட்டைக்குள் பிணமாக இருந்தது தனது மகன் பெரியசாமி தான் என்று கூறினார். பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
இதையடுத்து போலீசாருக்கு காளியப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காளியப்பனே தனது மகனை கொன்று சாக்குமூட்டையில் கட்டி கீழ்பவானி வாய்க்காலில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
சம்பவத்தன்று காலை பெரியசாமி என்னிடம், தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். அதற்கு பெரியசாமி சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மீண்டும் அன்று இரவும் பெரியசாமி என்னிடம் வந்து பணம் கேட்டார். ஆனால் நான் பணம் கொடுக்கவில்லை.
வாய்க்காலில் வீச்சு
இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி வீட்டில் கிடந்த கடப்பாரையை எடுத்து என்னை அடிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட நான் அவரிடம் இருந்த கடப்பாரையை பிடுங்கி அவரை அடித்தேன். மேலும் அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்தும் பெரியசாமியின் தலையில் ஓங்கி அடித்தேன்.  அவர் வலியால் அலறி துடித்தபடி அருகே கிடந்த கல்லில் விழுந்தார். இதில் அவர் இறந்துவிட்டார்.
இதனால் நான் செய்வதறியாது திகைத்தேன். கொலையை மறைக்க எண்ணிய நான் உடனே பெரியசாமியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் போட்டு் கட்டினேன். பின்னர் சாக்குமூட்டையை எடுத்து எனது தோளில் போட்டு சுமந்துகொண்டு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். 
தந்தை கைது
அதன்பின்னர் போலீசாருக்கு என் மீது சந்தேகம் வராமல் இருக்க மகனை காணவில்லை என்று  புகார் கூறி நாடகமாடினேன். ஆனால் போலீசார் ஆற்றில் மிதந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் அந்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
இதுகுறித்து திங்களூர் போலீசார் ெகாலை வழக்கு பதிவு செய்து காளியப்பனை  கைது செய்தனர். பின்னர் அவரை பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சபீனா பேகம் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காளியப்பன் பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்