விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம்

மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் விடுதிகளை காலி செய்ய மறுத்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு விடுதியில் இருந்து வழங்கப்பட்ட உணவும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-26 15:06 GMT
அண்ணாமலைநகர், 

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக அறிவித்தது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வசூலிக்கப்படுகிறது. 
ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், மற்ற அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க கோரியும் கடந்த 11-ந்தேதி முதல் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

விடுதிகளை காலி செய்ய மறுப்பு 

இதனால் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர மற்ற மாணவ-மாணவிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாகவும், உடனே மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யவும்  பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன் அறிவித்தார். ஆனால் மாணவர்கள் விடுதியை காலி செய்யாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கார் ஷெட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உணவு நிறுத்தம் 

எனவே போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப்பட்ட உணவு இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் தங்களுடைய சொந்த செலவில் உணவு ஏற்பாடு செய்து போராட்ட பந்தலில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். மேலும் மாணவ-மாணவிகள் தாங்கள் அணியும் வெள்ளை அங்கிகளை சமர்ப்பிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடத்துவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் மருத்துவக் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. 

மேலும் செய்திகள்