செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை இணைந்து விபத்தில்லா தூத்துக்குடியை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மாதம்தோறும் சீட் பெல்ட் அணிதல், ஹெல்மெட் அணிதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த மாதம் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்திய வண்ணம் வாகனங்களை இயக்குவதை கண்டறிந்தால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். வாகனங்களில் செல்லும்போது செல்போனில் அழைப்புகள் வந்தால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பேசிவிட்டு பின்னர் செல்ல வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.