மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பசுமை வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 273 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலெக்டர் கலந்துகொண்டார். பின்னர் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் காதுகேளாத இளம் சிறார்களுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 38 குழந்தைகளுக்கு ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவிகளை வழங்கினார். 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.