வீட்டுமனை ஆக்கிரமிப்பு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தினர்

வீட்டுமனையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-26 06:33 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருத்தணி அருகே உள்ள புச்சிரெட்டி பள்ளி காலனியை சேர்ந்தவர் அமுலு (வயது 40). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கடந்த சில மாதங்களாக அவரது வீட்டை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அமுலுவுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பாக அவர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இவரது வீட்டுமனையை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணியை மேற்கொண்டார்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கே மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தது.

அப்போது அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே வந்தவுடன் தான் மறைத்துவைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன் உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரை திருவள்ளூரில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவல வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்