சாலையோரத்திலேயே தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கோரி வியாபாரிகள் மனு
சாலையோரத்திலேயே தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கோரி வியாபாரிகள் மனு அளித்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம், நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 372 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. கூட்டத்தில் தெருவோர வியாபாரிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அரியலூர் நகரில் பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் வரை இருபுறமும் வியாபாரிகள் சிறு கடைகள் அமைத்து மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கோலமாவு, கேழ்வரகு கூழ் ஆகியவற்றை விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சிறு வியாபாரிகளின் கடைகளை அகற்றி வருகின்றனர். மேலும் சாலைகளை ஆக்கிரமிக்காமல் வியாபாரம் செய்து வரும் நிலையில், கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இந்த கடைகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம், தங்களது குடும்ப சூழ்நிலை முற்றிலும் சீர்குலைந்து விடும். எனவே சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார சூழ்நிலையை பரிசீலித்து, சாலை ஓரத்திலேயே தொடர்ந்து வியாபாரம் நடத்த அனுமதித்து தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். கூட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேருக்கு அடையாள அட்டைகளையும், ஒரு பயனாளிக்கு விலையில்லா தையல் எந்திரத்தையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.