உப்பள்ளி கலவரத்தில் கைதான வாலிபர் தேர்வு எழுதிய கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உப்பள்ளி கலவரத்தில் கைதான வாலிபர் தேர்வு எழுதிய கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.

Update: 2022-04-25 20:46 GMT
உப்பள்ளி:

உப்பள்ளி கலவரம்

  தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த பழைய உப்பள்ளி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலவரம் நடந்தது. அந்தப்பகுதியில் இன்னும் பதற்றம் நிலவி வருகிறது. இருப்பினும் போலீசார் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

  இதற்கிடையில் இந்த கலவரத்தில் தொடர்புடையதாக முஸ்லிம் மத குரு உள்பட 146 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 5 பேர் இன்னும் போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

  இவர்களில் கலவரம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த அபிஷேக் ஹிரேமட்டும் ஒருவர். இவர் தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் பி.யூ.சி தேர்வு எழுதி வருகிறார். தினமும் போலீஸ் பாதுகாப்பில்தான் பழைய உப்பள்ளியில் உள்ள பிரபல தனியார் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதி வருகிறார்.

  இந்நிலையில் நேற்று அவர் அதே கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றபோது, போலீசாருக்கு இ-மெயிலுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதில் அபிஷேக் தேர்வு எழுத செல்லும் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அவை வெடிக்கும் என்று கூறியிருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

  இதை அறிந்த போலீசார் உடனே மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீஸ் காவலில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது, பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த வதந்தியை பரப்பியிருப்பதாக தெரியவந்தது.

  இதனால் நேற்று பழைய உப்பள்ளி பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருவதால் போலீசார் ஒவ்வொரு கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்