தாலுகா அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை
சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டாா்கள்.
சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, பவானிசாகர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று பகல் 11 மணி அளவில் முன்னாள் பவானிசாகர் தொகுதி பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி தரவேண்டும்.
தினக்கூலியை ரூபாய் 400 ஆக உயர்த்தி தரவேண்டும். தொழிலாளர்களின் வேலை நேரத்தை சட்டவிரோதமாக அதிகரிக்க கூடாது என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
இதில் மாநில சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி, சுப்பராயன் எம்.பி., மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், மாவட்ட சங்க தலைவர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.