ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
ரேஷன் அரிசி கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேசுவரன் மற்றும் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள்.
மூலைக்கரைப்பட்டி பெருமாள்நகரில் இருந்து பேய்குளம் செல்லும் ரோட்டில் சின்னமூலைக்கரைப்பட்டி விலக்கில் வாகன சோதனை நடத்திய போது, அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பாளையங்கோட்டை தியாகராஜநகர் அன்பு நகரை சேர்ந்த நாகரகாஜ் மகன் ராஜேந்திரன் (வயது 20) என்பவரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதுதவிர பனவடலிசத்திரத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் ரோட்டில் ஆராய்ச்சிபட்டி விலக்கில் ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அதில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாளையங்கோட்டை கீழநத்தம் இசக்கிராஜா (20), தாழையூத்து தங்கராஜ் (29) உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இருந்து வெங்காடம்பட்டி செல்லும் ரோட்டில் ஒரு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 21 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக மயிலப்பபுரத்தை சேர்ந்த செல்லத்துரை மற்றும் புகழ் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்த 3 சம்பவங்களிலும் ரேஷன் அரிசி மற்றும் 3 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.