மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மோடி படம் வைக்க வேண்டும்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் சுத்தியல், ஆணியுடன் வந்தனர்.

Update: 2022-04-25 19:48 GMT
மதுரை, 
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் சுத்தியல், ஆணியுடன் வந்தனர்.
நடவடிக்கை
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அந்த சமயத்தில் பா.ஜனதா கட்சியினர் மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் அங்கு வந்தனர். அவர்கள் பிரதமர் மோடி படம் மற்றும் சுத்தியல், ஆணியுடன் வந்தனர். டாக்டர் சரவணன், கலெக்டர் அனிஷ் சேகரிடம் கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கு முன்பே பிரதமர் மோடி படத்தை உங்களிடம் தந்தோம். ஆனால் இதுவரை நீங்கள் இன்னும் படம் வைக்கவில்லை. 
எனவே நாங்கள் சுத்தியல், ஆணியுடன் வந்திருக்கிறோம். நீங்கள் சொல்லும் இடத்தில் நாங்கள் பிரதமர் மோடி படத்தை மாட்டுகிறோம் என்றனர். உடனே கலெக்டர், உங்களது கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும  என்றார். அதன்பின்னர் பா.ஜனதா கட்சியினர் கலெக்டரிடம் பிரதமர் மோடி படத்தையும் ஒரு மனுவை கொடுத்தனர்.
ரூ.1 கோடி நிவாரணம்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிகவும் மந்த நிலையில் நடக்கிறது. எனவே இந்த பணிகளை துரிதப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். மதுரை மாநகரில் 150 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
 எனவே சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சித்திரை திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அதே போல் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசு வேலையும், ரூ.1 கோடி நிவாரணமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மாவட்ட துணை தலைவர் ஜெயவேல், கீரைத்துறை குமார், பொருளாளர் மோகன்குமார், மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், வினோத்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்