விபத்தில் போலீஸ்காரர் சாவு: கார் டிரைவர் கைது

விபத்தில் போலீஸ்காரர் இறந்த வழக்கில் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-25 19:43 GMT
வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு மேற்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 54). இவர் நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வள்ளியூர் நான்குவழிச் சாலையில் செந்தில் முருகன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், செந்தில் முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயமடைந்த செந்தில் முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய வாகனம் கார் என்பதும், நெல்லை தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 56) என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்