கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வக்கீல்
விருதுநகரில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வக்கீல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்தவர் வக்கீல் வீராச்சாமி (வயது 68). இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். கடந்த 1991-ம் ஆண்டு விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் மூப்பனார் தொடங்கிய த.மா.க.வில் தன்னை இணைந்து பணியாற்றி வந்தார். விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே இவரது அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று சூலக்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்த போது இவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக இவரது குடும்பத்தினரும், நண்பர்களும் இவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ெதாடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், சமீபகாலமாக இவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இவரது மகன் கனடாவில் இருந்து வரும்நிலையில், மனைவி மற்றும் என்ஜினீயரிங் முடித்துள்ள மகளுடன் வக்கீல் வீராச்சாமி சூலக்கரையில் வசித்து வருகிறார். வீராச்சாமியின் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.