புதுக்கோட்டை போஸ் நகரில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை போஸ் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டால் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-25 19:17 GMT
புதுக்கோட்டை:
குடிநீர் தட்டுப்பாடு
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் பொதுமக்களுக்கு வீடுகள் மற்றும் தெருக்குழாய்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பலர் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினையை போக்க நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர். கவுன்சிலர்களும் தங்களது பகுதி பொதுமக்களுக்காக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஆவேசமடைந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் குடிநீர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சியில் போஸ்நகரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
மேலும் சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பானது.

மேலும் செய்திகள்