மாநில அளவில் பெண்கள் கபடி போட்டி:ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன்
சிங்கம்புணரியில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமைச்சர் ேக.ஆர்.பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.
பெண்கள் கபடி போட்டி
சிங்கம்புணரி ஒன்றிய நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவில் பெண்கள் கபடி போட்டி நடந்தது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் இரும்பு தூண்கள் கொண்டு பிரமாண்டமான முறையில் கேலரி அமைத்து போட்டி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், பெரு நகரங்களில் இருந்து 13 அணிகள் கலந்து கொண்டன.கபடி போட்டியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியின் நடுவர்களாக காளாப்பூர் ஆசிரியர் ஜோதிமணி மற்றும் புரோ கபடி நடுவர் சிவனேசன் சிங்கம்புணரி பவுன்ராஜ் உள்பட 15 பேர் பணியாற்றினார்.
ஒட்டன்சத்திரம் அணி சாம்பியன்
2 நாள் நடந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. இந்த அணிக்கு வெற்றிக்கான கோப்பையையும் முதல் பரிசு தொகையான அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தனது சொந்த நிதியில் வழங்கிய ரூ.1 லட்சத்து 69 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
2-ம் பரிசு வென்ற கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்.அணிக்கு வெற்றி கோப்பையையும், சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து சொந்த நிதியில் இருந்து ரூ.75 ஆயிரத்து 69 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது..3-ம் பரிசு வென்ற சென்னை சிட்டி போலீஸ் அணிக்கு தி.மு.க. அவைத்தலைவர் சிவக்குமார் சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்து 69 ரொக்கம் வழங்கப்பட்டது. 4-ம் பரிசு வென்ற தேக்கம்பட்டி சிவக்குமார் ஸ்போர்ட்ஸ் கிளப் கோவை அணிக்கு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இந்தியன் செந்தில் சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்து 69 ரொக்கம் மற்றும் வெற்றி கோப்பையையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கி பாராட்டினார்.