இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் அகதிகளாக ராமேசுவரம் வந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஒரே நாளில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் அகதிகளாக நேற்று ராமேசுவரம் வந்தனர்.

Update: 2022-04-25 18:54 GMT
ராமேசுவரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஒரே நாளில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் அகதிகளாக நேற்று ராமேசுவரம் வந்தனர்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் அங்கு மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 
இதனால் தமிழகத்திற்கு இலங்கை மக்கள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் 60 பேர் வந்துள்ளனர்.
15 பேர் படகில் வந்தனர்
இந்த நிலையில் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு பிளாஸ்டிக் படகில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் புறப்பட்டுள்ளனர்.
நேற்று ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலுக்கு இடைப்பட்ட இரட்டைத்தாழை கடற்கரையில் வந்து இறங்கினர். 
இவர்ளை கடற்கரையில் இறக்கி விட்டுவிட்டு பிளாஸ்டிக் படகில் வந்த 2 படகோட்டிகள் மீண்டும் இலங்கையை நோக்கி கடல் வழியாக தப்பிச் சென்றுவிட்டனர்.
போலீசார் விசாரணை
கடற்கரை பகுதியில் இருந்து அகதிகள் வந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர மற்றும் கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, 6 ஆண்கள், 5 பெண்கள், 4 குழந்தைகள் அகதிகளாக வந்திருப்பது தெரியவந்தது.
பின்னர் 15 பேரையும் வாகனத்தில் ஏற்றி, மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். 
நேற்று வந்த அகதிகளுடன் சேர்த்து கடந்த 1 மாதத்தில் மட்டும் இதுவரையிலும் மொத்தம் 75 பேர் அகதிகளாக ராமேசுவரம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்