மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு சாகும் வரை சிறை
மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு சாகும் வரை சிறை-ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் தாய் சமையல் வேலைக்கு சென்று வந்தாராம். தாய் வெளியூர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் சிறுமியின் தந்தை தனது மகள் என்றும் பாராமல் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதி சிறுமியின் தாய் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மகளிடம் அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தினாராம். இதனை பொறுக்க முடியாமல் சிறுமி கதறி அழுதுள்ளார். இதனால் வெளியில் இருந்த தாய் வீட்டுக்குள் வந்து பார்த்தபோது அங்கு நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஏ.சுபத்திரா விசாரித்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.