இயற்கை விவசாயம் குறித்த வழிகாட்டல்கள் பயிற்சி
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த வழிகாட்டல்கள் பயிற்சியின் ஒருபகுதியாக இயற்கை விவசாயப் பண்ணையில் களப்பயிற்சி வழங்கப்பட்டது.
போடிப்பட்டி
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த வழிகாட்டல்கள் பயிற்சியின் ஒருபகுதியாக இயற்கை விவசாயப் பண்ணையில் களப்பயிற்சி வழங்கப்பட்டது.
மண்வள மேம்பாடு
கிராமப்புற இளைஞர்களிடையே இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ஒரு மாத பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று வரும் இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில், இயற்கை வேளாண்மையின் நோக்கம், உற்பத்தி முறைகள், மண்வள மேம்பாடு, பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுக் காரணிகள், விதை உற்பத்தி, மகசூல் மேம்பாடு, விளைபொருள் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
வருங்கால விவசாயம்
இந்த பயிற்சியின் ஒருபகுதியாக கேத்தனூர் பகுதியிலுள்ள இயற்கை விவசாயி பழனிச்சாமியின் தோட்டத்தில் நேரடி களப்பயிற்சி வழங்கப்பட்டது.
அப்போது இயற்கை விவசாயத்தின் அடிப்படையான மண்வள மேம்பாட்டுக்கு உதவும் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், அமிர்தக் கரைசல் மற்றும் மண்புழு உரம் உற்பத்தி முறைகள், சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் விளக்குப் பொறிகள் மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகள் குறித்து விவசாயி பழனிசாமி விளக்கிக் கூறினார்.
மேலும் வருங்கால விவசாயம் என்பது இளைஞர்களின் ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் தான் உள்ளது என்று கூறிய மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, இயற்கை விவசாயத்தில் தங்கள் தொழில்நுட்ப அறிவுகளை மேம்படுத்தி மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார். இந்த பயிற்சியின் போது அங்ககச் சான்று ஆய்வாளர் ஹேமா, விதைச்சான்று அலுவலர்கள் (தொழில்நுட்பம்) வசந்தாமணி, கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.