போதை மாத்திரைகள் விற்பனை அதிகரிப்பு
நாகர்கோவிலில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து உள்ளது. 10 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து உள்ளது. 10 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போதை பொருட்கள்
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மும்முரமாக நடந்து வந்தது. கஞ்சா விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அதை விட ஒரு படி மேலே சென்று போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் மும்பையில் இருந்து ரெயில் மூலம் கடத்தி வரப்படுவதாகவும், பின்னர் அவற்றை ஒரு கும்பல் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்வதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த போதை மாத்திரைகள் மாணவர்களுக்கே பெரும்பாலும் சப்ளை செய்யப்பட்டு வந்ததாகவும் குறிப்பாக நாகர்கோவிலில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மும்பையில் இருந்து கடத்தல்
இந்த போதை மாத்திரை விற்பனையில் கடந்த 10 நாட்களில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 16-ந்தேதி கோட்டார் ரெயில் நிலையம் அருகே 2 மோட்டார் சைக்கிளுடன் 5 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையொட்டி கோவில்விளையை சேர்ந்த அருண் (வயது 23), அபிஷ் (22), புத்தளத்தை சேர்ந்த பிரபாகரன் (22), ஆரோக்கியராஜ் (22), இருளப்பபுரம் விஜயன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த போதை மாத்திரைகளை அவர்கள் மும்பையில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
கைது
இந்தநிலையில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் வல்லன்குமாரன்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த 7 வாலிபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனா்.
அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 75 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசாா் பறிமுதல் செய்தனா். அதைத்தொடர்ந்து வல்லன்குமாரன்விளையை சேர்ந்த விஷ்ணு (வயது 19), அரவிந்த் (19), பானு மற்றும் வட்டவிளை கோகுல், சரக்கல்விளை சஞ்சய், தனுஷ், பரதீப்ராஜா ஆகிய 7 பேர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் மாணவர்கள் ஆவார்கள். இந்த போதை மாத்திரைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.