இணைப்பு பாலம் இடிந்து குடிநீர் குழாய்கள் சேதம்
லோயர்கேம்ப் அருகே இணைப்பு பாலம் இடிந்து விழுந்ததில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன.
கூடலூர்:
லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடலூர், கம்பம் நகர பகுதிகளுக்கும், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், காமயகவுண்டன்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கும், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தற்போது லோயர்கேம்ப் அருகே குருவனூத்து பாலம், சிறு புனல் நீர்மின் நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள், பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று மாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாத நிலையில், பழைய இணைப்பு பாலம் இடிந்து கீழே விழுந்தது. இதனால் பாலத்தின் மேலே சென்ற கூட்டுக்குடிநீர் குழாய்களும் உடைந்து சேதம் அடைந்தது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.