தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ஆண்டிப்பட்டி அருகே அக்காள் கணவரை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருடைய அக்காள் முருகேஸ்வரியின் கணவர் ராஜேஷ்கண்ணன் (48). இவர் தேனியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். முருகேஸ்வரி தனது மகளுக்கு தனது கணவரிடம் ஆலோசிக்காமல் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த 2017-ம் ஆண்டு முருகேஸ்வரி குறித்து அவருடைய தம்பி செந்திலிடம், ராஜேஷ்கண்ணன் அவதூறாக பேசி தகராறு செய்தார். இந்த தகராறை சிலர் விலக்கி விட்டனர். அதே நாளில் மீண்டும் செந்திலிடம் ராஜேஷ்கண்ணன் தகராறு செய்தார். அப்போது அவரை ஒரு கட்டையால் செந்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற ராஜேஷ்கண்ணன் தனது வீட்டில் இறந்துகிடந்தார்.
அவருடைய உடல் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ராஜேஷ்கண்ணனின் உடலில் காயங்கள் இருந்ததும், செந்தில் தாக்கியதால் அவர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி விஜயா நேற்று தீர்ப்பு கூறினார். இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்பதால் இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை, 304 (1) (கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல்) பிரிவின் கீழ் திருத்தம் செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதன்படி, இந்த வழக்கில் செந்திலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து செந்திலை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.