ஒலிபெருக்கிகளை வைக்க, அகற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- உள்துறை மந்திரி தகவல்

ஒலிபெருக்கிகளை புதிதாக வைக்க அல்லது அகற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார்.

Update: 2022-04-25 16:34 GMT
கோப்பு படம்
மும்பை, 
ஒலிபெருக்கிகளை புதிதாக வைக்க அல்லது அகற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார்.
அனைத்துக்கட்சி கூட்டம்
மசூதிகளில் உள்ள அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை வரும் 3-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் உள்ளிட்டவர்கள் ஆளுங்கட்சி சார்பில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தை பா.ஜனதா புறக்கணித்ததாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இதேபோல ராஜ் தாக்கரேவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதிகாரம் கிடையாது
இந்தநிலையில் கூட்டத்திற்கு பிறகு உள்துறை மந்திாி திலீப் வல்சே பாட்டீல் கூறியதாவது:-
 சில கட்சிகள் ஒலிபெருக்கி விவகாரத்தில் ஒழுங்குமுறை வேண்டும் என கூறி, காலக்கெடுவையும் விதித்து உள்ளன. அனைத்து கட்சி கூட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து கடந்த 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதனை பின்பற்றி மற்ற கோர்ட்டுகளும் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளன.
இந்த உத்தரவுகள் அடிப்படையில் ஒலிபெருக்கி பயன்பாடு, அனுமதி வழங்குவது தொடர்பாக 2015-2017 ஆண்டுகளில் மராட்டிய அரசு உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது. அதன் அடிப்படையில் தான் மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.   
ஒலிபெருக்கிகளை வைப்பது, அகற்றுவது தொடர்பாக மாநில அரசுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் எதுவும் கிடையாது. ஏற்கனவே ஒலிப்பெருக்கி வைத்து இருப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்