சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான நீரை திறக்க பொதுப்பணித்துறையினர் ஆந்திரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-04-25 16:25 GMT
கிருஷ்ணா நதி நீர்

சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். அதன்படி ஆந்திர மாநில அரசு, ஆண்டுக்கு 2 தவணைகளாக கிருஷ்ணா நீரை திறந்துவிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழையும் கைகொடுத்ததால் ஏரிகளில் ஏதிர்பார்த்த அளவு நீர் நிரம்பியது. தற்போது ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் நீரை திறக்க கோரி ஆந்திரா மாநில அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். இதனால் பூண்டி ஏரிக்கு விரைவில் கிருஷ்ணா நதிநீர் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ஏரிகளின் நீர் மட்டம்

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் ஆயிரத்து 831 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 291 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 894 மில்லியன் கன அடியும் நீர் உள்ளது.

அதேபோல் 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரியில் 479 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 496 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 425 மில்லியன் கன அடியுடன் ஏரி நிரம்பி உள்ளது.

67 சதவீதம் இருப்பு

பூண்டி ஏரியில் 56.45 சதவீதமும், சோழவரம் ஏரியில் 26.18 சதவீதமும், புழல் ஏரியில் 87.70 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 95.60 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 68.07 சதவீதமும், வீராணம் ஏரியில் 28.45 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளிலும் 67.70 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.) தற்போது 8 ஆயிரத்து 376 மில்லியன் கன அடி (8.37 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. கோடை மழை ஓரளவு பெய்தால் ஏரிகளின் நீர் மட்டம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8 ஆயிரத்து 512 மில்லியன் கன அடி (8.5 டி.எம்.சி.) இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்