கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி நிறைவு

கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி நிறைவு

Update: 2022-04-25 15:11 GMT
கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி நிறைவு
கோவை

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விட்டது. இங்குள்ள பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 200 எம்.எல்.டி. முதல் 230 எம்.எல்.டி. வரை (23 கோடி லிட்டர்) குடிநீர் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் 2035-ம் ஆண்டு கோவை மாநகர பகுதியில் உள்ள மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு ரூ.779 கோடியில் பில்லூர் குடிநீர் திட்டம்-3 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. (17 கோடி லிட்டர்) குடிநீர் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். மேட்டுப்பாளையம் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் குழாய்களை கொண்டு வரும் வழியில் தண்டிபெருமாள்புரம் பகுதி அருகே கட்டாஞ்சி என்ற மலை உள்ளது. பில்லூர் 1 மற்றும் 2 குடிநீர் திட்டத்துக்கு இந்த மலையை குடைந்து குழாய்கள் போடப்பட்டு உள்ளன. எனவே 3-வது குடிநீர் திட்டத்துக்கும் இந்த மலையில் குகை அமைத்து ராட்சத குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டன.

இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.61 கோடியே 35 லட்சத்தில் 900 மீட்டர் தூரத்துக்கு மலையை குடைந்து குகை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள முக்கிய திட்டங்களை செய்யும் பிரிவு மேற்கொண்டது.
அதன்படி 10 மீட்டர் அகலம், 6 மீட்டர் உயரத்தில் குகை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதற்காக ஏராளமான என்ஜினீயர்கள் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கோவைக்கு கூடுதலாக குடிநீர் வழங்க தயாராகி 3-வது பில்லூர் திட்டத்துக்கான  வரும் கடந்த 23-ந் தேதி கட்டாஞ்சி மலையில் குகை அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து உள்ளது. அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்