மார்க்கெட்டுக்கு பாகற்காய் வரத்து குறைந்தது

தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால், மார்க்கெட்டுக்கு பாகற்காய் வரத்து குறைந்தது. விலை உயராததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-04-25 14:40 GMT
கூடலூர்

தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால், மார்க்கெட்டுக்கு பாகற்காய் வரத்து குறைந்தது. விலை உயராததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோடைகால பயிர்கள்

கூடலூர் பகுதியில் கோடைகால பயிர்களான பாகற்காய், அவரைக்காய், தட்டைப்பயறு உள்ளிட்டவை விளைவிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பாகற்காய் விளைச்சல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக விலை குறைந்தது. மேலும் விலை நிர்ணயிப்பது தொடர்பாக மொத்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகளிடம் இருந்து பாகற்காய்களை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இந்த நிலையில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதுமலை, தேவர்சோலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 

உரிய விலை இல்லை

இதன் காரணமாக கோடைகால பயிரான பாகற்காய் கொடிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் மாறியது. தொடர்ந்து பாகற்காய் விளைச்சலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கெட்டுக்கு பாகற்காய் வரத்து குறைந்து வருகிறது. இருப்பினும் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- மொத்த வியாபாரிகள் ஒன்றிணைந்து விலை நிர்ணயித்து வருவதால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டதால், மொத்த வியாபாரிகள் பல்வேறு காரணங்களை கூறி வந்தனர். 

கிலோவு ரூ.13-க்கு விற்பனை

தற்போது தொடர் மழையால் பாகற்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து இருக்கிறது. ஆனால் தொடக்க சமயத்தில் வழங்கிய கொள்முதல் விலையை தற்போது வரை தொடர்ந்து அளித்து வருகின்றனர். 

கிலோ பாகற்காய் ரூ.13 என்று விற்கப்பட்டு வருகிறது. கூடலூர் மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் இணைந்து குறைந்த விலையை நிர்ணயம் செய்வதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே அதிகாரிகள் விவசாய விளை பொருட்களை நியாயமான விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்