மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததால் பா.ஜனதாவினர் விரக்தியில் உள்ளனர்- சரத்பவார் கருத்து

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததால் பா.ஜனதாவினர் விரக்தியில் உள்ளனர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

Update: 2022-04-25 12:26 GMT
படம்
மும்பை, 
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததால் பா.ஜனதாவினர் விரக்தியில் உள்ளனர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
 விரக்தியில் உள்ளனர்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்து இருந்த சுயேச்சை எம்.பி. நவ்னீத் ரானா, ரவி ரானா எம்.எல்.ஏ. கைது, கிரித் சோமையா கார் கண்ணாடி உடைப்பு மற்றும் ஒலிப்பெருக்கி விவகாரத்தால் மராட்டிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து புனேயில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:- 
ஆட்சி அதிகாரம் வரும், போகும். அதற்காக விரக்தி அடைய வேண்டிய தேவையில்லை. சிலர் விரக்தியில் உள்ளனர். அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஏனெனில் தேர்தலுக்கு (2019 சட்டசபை தேர்தல்) முன் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
ஜனாதிபதி ஆட்சி
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற அச்சுறுத்தல் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் எதுவும் நடக்காது. இது ஒன்றும் புதிதல்ல. எல்லோரும் என்னைப்போல கிடையாது. 1980-ல் எங்கள் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் அதுகுறித்து நள்ளிரவு 12.30 மணிக்கு எனக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நான் எனது நண்பர்களுடன் முதல்-மந்திரி இல்லத்தை காலி செய்தேன். மறுநாள் நாங்கள் அனைவரும் கிரிக்கெட் போட்டி பார்க்க வான்கடே மைதானம் சென்றோம். அன்று முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். ஒருவேளை தற்போது தேர்தல் நடந்தால் என்ன முடிவு கிடைக்கும் என்பது சமீபத்தில் நடந்த கோலாப்பூர் தொகுதி இடைத்தேர்தல் மூலம் தெரியவந்து உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
---------------------

மேலும் செய்திகள்