மும்பையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி
மும்பையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியானான்.
மும்பை,
மலாடு கிழக்கு கவுதம் நகரில் உள்ள கனகியா லெவல்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிராக். இவரது 4 வயது மகன் மகிர் ஷா. சம்பவத்தன்று மகிர் ஷா, தாய் போரமுடன் கட்டிடத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்றார். மதியம் 1 மணியளவில் அவர் நீச்சல் வகுப்பு முடிந்து வெளியே வந்தார். அதன்பிறகு சிறுவனின் தாய் போரத்துக்கு நீச்சல் வகுப்பு தொடங்க இருந்தது. இந்தநிலையில் அந்த பகுதியில் விளையாடி கொண்டு இருந்த சிறுவன், திடீரென தவறி நீச்சல் குளத்தில் விழுந்தான். சிறுவன் தவறி விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. இதனால் அவன் தண்ணீரில் மூழ்கினான்.
இந்தநிலையில் சில நிமிடங்கள் கழித்து சிறுவனின் தாய் அவன் மாயமானதை அறிந்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் சிறுவனை தேடினர். இந்தநிலையில் சிறுவன் சிறிது நேரத்தில் நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்தான். தகவல் அறிந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.