வில்லிவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு

வில்லிவாக்கத்தில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-04-25 00:27 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை வில்லிவாக்கம், திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியபிரசாத் (வயது 55). இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை ஆசிரியர் பிரியபிரசாத் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி மற்றும் மகன்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

50 பவுன் நகை திருட்டு

அப்போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் நகை, பணம் திருடப்பட்டு இருந்தது.

இதுபற்றி பிரியபிரசாத் அளித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரியபிரசாத் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம். மர்மநபர்கள் அதனை நோட்டமிட்டு, வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து அந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்