தென்காசியில் ரூ.14 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்
தென்காசியில் ரூ.14 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது திறந்து வைத்தார்
தென்காசி:
தென்காசியில் ரூ.14 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது திறந்து வைத்தார்.
நீதிமன்ற வளாகம்
தென்காசியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்), முதன்மை மாவட்ட முன்சீப் கோர்ட்டு, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டு, முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஆகிய 6 நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்தும் தனித்தனி இடங்களில் இயங்கி வருகின்றன.
இந்த அனைத்து நீதிமன்றங்களையும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தென்காசி- நெல்லை ரோட்டில் பழைய அரசு ஆஸ்பத்திரி இருந்த இடத்தில் 6 நீதிமன்றங்களை இணைத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முதன்மை நீதிபதி
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா வரவேற்று பேசினார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வெங்கடகிருஷ்ணன் திட்ட அறிக்கையை வாசித்தார்.
மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், வக்கீல்கள் சங்க தலைவர்கள் செல்லத்துரை பாண்டியன், புகழேந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் முதன்மை குற்றவியல் நீதிபதி மனோஜ் குமார் நன்றி கூறினார்.
விழாவில் அரசு வக்கீல்கள் வேலுச்சாமி, இருதயராஜ், முருகன், முத்துக்குமாரசுவாமி, அன்புச்செல்வன், முன்னாள் அரசு வக்கீல் கார்த்திக் குமார் மற்றும் வக்கீல்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.