தம்பதியை தாக்கி நகை, பணம் பறித்த 4 பேர் கைது
தம்பதியை தாக்கி நகை, பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 41). கட்டிட தொழிலாளி. இவர் என்ஜினீயர் மணிவண்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கா நகரில் மணிவண்ணன் புதிய வீடு கட்டி வருகிறார். சுரேஷ் அந்த இடத்தில் கொட்டகை அமைத்து தனது மனைவி ரங்கம்மாள், மகன்கள் ஹரி ஹரன், சிவக்குமார் ஆகியோருடன் அங்கு தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை கட்டிட பணி நடைபெறும் இடத்தில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(30), அஜித்குமார்(23), விமல்(21), ராம்குமார்(21) ஆகியோர் மது அருந்தினர். அப்போது சுரேஷ் அதனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் உருட்டுக்கட்டையால் கணவன், மனைவியை தாக்கினர். மேலும் அங்கு வைத்திருந்த ரூ.10 ஆயிரம், 2 கிராம் தங்க நகை, 2 செல்போன்களை பறித்து சென்றனர்.
மேலும் ஸ்ரீரங்கம் ரெயில்வே கேட் தண்டவாளத்தில் அவர்கள் 4 பேரும் நடந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மோகனவிக்னேஷ் என்பவரிடம் பணம் கேட்டு தாக்க முயன்றனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசை மிரட்டினர். இந்த சம்பவம் பற்றி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், அஜித்குமார், விமல், ராம்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.