நடிகை லட்சுமிக்கு ராஜ்குமார் விருது
நடிகை லட்சுமிக்கு ராஜ்குமார் விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.
பெங்களூரு:
2017-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு திரைப்பட விருதுகளை வழங்கினார். இதில் பிரபல தமிழ் நடிகை லட்சுமிக்கு டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல இயக்குனர் நாராயணனுக்கு புட்டண்ணா பெயரில் விருதும், மறைந்த பிரபல தயாரிப்பாளர் லட்சுமிபதிக்கு டாக்டர் விஷ்ணுவர்தன் விருதும் வழங்கப்பட்டது. லட்சுமிபதி மறைந்து விட்டதால் அவரது மகன் ராமபிரசாத் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும். தற்போதைய 2022-23-ம் மாநில பட்ஜெட்டில் 125 கன்னடம் மற்றும் பிராந்திய படங்களுக்கு பதிலாக 200 படங்களை அனுமதித்து உள்ளோம். வீரப்பன் பிடியில் இருந்து வெளியே வந்த பின்னர் டாக்டர் ராஜ்குமாரிடம் நான் பேசினேன். அப்போது அவர் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களையும், மோசமான அனுபவங்களையும் பற்றி எதுவும் கூறவில்லை. அவர் ஒரு உன்னதமான மனிதர். டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் எளிமை மற்றும் மனிதநேயம் கொண்டவர்கள்’ என்றார்.