புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவிலில் வினோத வழிபாடு: பாம்பு, தேள் உருவ பொம்மையை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவிலில் பாம்பு, தேள் உருவ பொம்மையை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-04-24 20:34 GMT
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே கோவிலில் பாம்பு, தேள் உருவ பொம்மையை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடைபெற்றது. 
அய்யா சாமி கோவில்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள அலங்காரிபாளையத்தில் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான அய்யா சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. 
இந்த ஆண்டு சித்திரை மாத முதல் சனிக்கிழமை இரவு அய்யா சாமிக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அப்போது அய்யா சாமிக்கு ஆயிரம் பழம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. குறிப்பாக சித்திரை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இந்த கோவில் விழாவில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் களிமண் உருவ சிலைகளை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கு வாழை பழத்தால் அபிஷேகம் செய்து வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறும். 
நேர்த்திக்கடன்
அதன்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா சாமி கோவிலில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அய்யா சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாம்பு, தேள், பூரான், பல்லி மற்றும் சிலந்தி போன்ற விஷ ஜந்துகளின் மண் உருவபொம்மைகள் வாங்கினர். இதைத்தொடர்ந்து அய்யா சாமி, கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் விஷ ஜந்துகளின் உருவ பொம்மைகளை வைத்து வழிபட்டனர். அதன் பிறகு கற்பூரம் ஏற்றி பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் மண் சிலைகளை, நடுகல்லில் உடைத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பதுடன், மனிதர்களை விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
அன்னதானம்
இந்த விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், சேவூர், நம்பியூர், அவினாசி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, பனையம்பள்ளி, இரும்பறை மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் விற்பனை செய்யப்பட்ட மண் பானை, தண்ணீர் குவளை, மண் அடுப்பு உள்ளிட்ட மண் பாண்ட பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். விழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்