தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடியில் தூர்வாரும் பணி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-24 19:14 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரப்படும். அதன்படி இந்த ஆண்டும் தூர்வாரும் பணிக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூர்வாரும் பணி

இதன் மூலம் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 4 ஆயிரத்து 964.11 கி.மீ. நீளத்துக்கு 683 பணிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் 810 எந்திரங்களை கொண்டு தூர்வாரப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஜூன் 10-ந் தேதிக்குள் முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள குழிமாத்தூர் கோணக்கடுங்கலாறு வாய்க்கால் தூர்வாரும் பணியை தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த வாய்க்கால் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 2½ கி.மீ. தூரம் தூர்வாரப்படுகிறது.

அமைச்சர் பேட்டி

பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி மே 31-ந்தேதிக்குள் தேதிக்குள் முடிக்கப்பட்டு விடும். தூர்வாரும் பணிக்கு கடந்த ஆண்டுகளை விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆனால், வாய்க்கால்களில், ஆறுகளில் கழிவுநீர் கலப்பது, குப்பைகளை கொட்டுவது கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு தேவையாக உள்ளது.

தனி பட்ஜெட்

எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பாக விவசாயத்திற்கு என தமிழகத்தில் தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் தான் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், காவிரி கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவிரி செயற்பொறியாளர் சொர்ணகுமார், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், உதவி பொறியாளர்கள் அய்யம்பெருமாள், மாரிமுத்து, மலர்விழி, சிவக்குமார், சேகர், அரவிந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்