ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது

மதுரையில் பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-24 19:01 GMT
மதுரை, 
மதுரையில் பள்ளி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
தலைமை ஆசிரியர்
மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஜெயசீலன் (வயது 46). இவர் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இந்த பள்ளிக்கு வேறு பள்ளியில் இருந்து 2 ஆசிரியைகள் பணி மாறுதலாகி வந்துள்ளனர். அவர்களுக்கு, ஜோசப் ஜெயசீலன் அவ்வப்போது பாலியல் ரீதியிலான தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த 2 ஆசிரியைகளும் ஜோசப் ஜெயசீலனை எச்சரித்துள்ளனர். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் பணி மாறுதல் கேட்டு கல்வி அதிகாரியிடம் விண்ணப்பித்தனர். அதன்படி அவர்களுக்கு பணிமாறுதலும் கிடைத்தது. ஆனால் அவர்களை பணியில் இருந்து ஜோசப் ஜெயசீலன் விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு ஆசிரியை, ஜோசப் ஜெயசீலனின் பாலியல் தொல்லை குறித்து, மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
தலைமறைவு
இதனை அறிந்த அவர், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய, மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலனை தேடி வந்தனர்.
ஆள்மாறாட்டம்
 அவரது செல்போன் சிக்னல் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பதாக காண்பித்தது. இதனை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. அதன்பின்னர், அவரது வங்கி கணக்கை போலீசார் முடக்கினர். அப்போது அவர் ஆள்மாறாட்டம் செய்து, அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தது கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவாகியது தெரியவந்தது. அந்த காட்சியில், ஜோசப் ஜெயசீலன் மொட்டை அடித்து தாடி வைத்து இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் பல்வேறு கட்டங்களாக அவரை தேடினர். அப்போது, அவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து தேடிய போதும் கிடைக்கவில்லை.
கைது
இதற்கிடையே, மதுரை தெற்குவாசல் பந்தடி பகுதியில் ஜோசப் ஜெயசீலன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பின்னரே இதில் யார், யார் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள், இவர் வேறு யாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளரா என்ற விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்