பல்துறை பணி விளக்க கண்காட்சி

பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-24 18:48 GMT
பெரம்பலூர், 
பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவையொட்டி பல்துறை பணி விளக்க கண்காட்சி பாலக்கரையில் நேற்று தொடங்கியது. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசின் திட்டங்கள் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை பார்வையிட்டு அமைச்சர் சிவசங்கர் அரசு துறைகளின் சார்பில் 328 பேருக்கும், 10 வேளாண்மை குழுவினர்களுக்கும் மொத்தம் ரூ.80 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர் பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகையினை வழங்கினார். 
கண்காட்சியில் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லலிதா, நகர் மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மொத்தம் 40 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமம் முதல் நெடுவாசல் கிராமம் வரை செல்லும் மருதையாற்றில் தூர்வாரும் பணியினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலைவிழாவிலும் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். முன்னதாக அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே கடந்த காலங்களில் சென்னையில் மினி பஸ்கள் குறைக்கப்பட்டிருந்தது. குறைக்கப்பட்ட பஸ்களில் சில மற்ற மாவட்டங்களுக்கு கடந்த ஆட்சியில் அனுப்பப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள் ஒவ்வொன்றாக இயக்கப்படுகிறது. படிப்படியாக ஆய்வு செய்து வழித்தடங்களில் கூடுதலாக புதிய பஸ்கள் விடப்படும். நடத்துனர் பணிக்கான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்கள் மோதி விபத்தில் பாதிக்கப்படுவர்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் அரசு பஸ்களுக்கு காப்பீடு செய்ய துறை ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

மேலும் செய்திகள்