பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
வார விடுமுறை நாளையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வாரவிடுமுறை நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் வந்து தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர். அதிகாலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதேபோல் கிரிவீதிகளில் கார், வேன் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பக்தர்களின் வருகையால் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகள், வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக பழனி வடக்கு கிரிவீதியில் நிழற் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருப்பதால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.