வாலிபர் வெட்டிக்கொலை
கோட்டூர் அருகே பெண் தற்கொலைக்கு காரணம் என கருதி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோட்டூர்:
கோட்டூர் அருகே பெண் தற்கொலைக்கு காரணம் என கருதி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மேல கண்டமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது32). இவருடைய மனைவி ராதிகா(30). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன்பிறகு சுரேஷ் தனது 2 மகள்களுடன் தென்கோவனூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். ராதிகாவின் இறப்புக்கு மேல கண்டமங்கலத்தில் உள்ள தனது வீட்டின் எதிர்வீட்டில் வசிக்கும் கணேசன் மகன் முருகேசன்(35) தான் காரணம் என சுரேஷ் நினைத்து அவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்தார்.
அாிவாள் வெட்டு
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுரேஷ்(32) மற்றும் ராதிகாவின் தம்பி தாஸ்(28) ஆகியோர் மேலகண்டமங்கலத்துக்கு வந்தனர். அப்போது இரவு சுமார் 9 மணி அளவில் முருகேசன் தனது வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இதைக்கண்ட சுரேஷ் மற்றும் தாைச ஆகிய இருவரும் முருகேசனை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரது தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பரிதாப சாவு
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து முருகேசனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் தாசை தேடி வந்தனர்.
கைது
இந்தநிலையில் நேற்று காலை மேலகண்டமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் தாசை கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.