தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2022-04-24 17:37 GMT

கண்டாச்சிமங்கலம், 

தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் "நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில்  ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது  புதிய கழிவறைகளை கட்டுதல், பழைய பூங்காக்களை மறுசீரமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய பெயர் பலகை மற்றும் தகவல் பலகைகளை அமைத்தல், பிரசவ அறை மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய அறைகளை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார். 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் புதிய சாலைகள் அமைக்கவும், குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் உறிஞ்சும் தொட்டி அமைக்கவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். 

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுபவர்களிடம் அங்குஅளிக்கப்படும் சிகிச்சை மற்றும் குறைகள் குறித்தும் கலெக்டர் ஸ்ரீதர் கேட்டறிந்தார்.


அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ரவீன், தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பன்னீர்செல்வம், இந்திராணி,  தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்