ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஆவூர் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆவூர்:
புனித பெரியநாயகி அன்னை ஆலயம்
விராலிமலை தாலுகா, ஆவூரில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கு அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் பாஸ்கா, தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பாஸ்கா விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. அன்று மாலை கீரனூர் பங்குத்தந்தை அருளானந்தம் தலைமையில் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டு கூட்டு திருப்பலி நடத்தினர்.
சப்பர பவனி வீதி உலா
இதைதொடர்ந்து இரவு 10 மணியளவில் ஏசுவின் திருப்பாடுகளின் பாஸ்கா நிகழ்வான மழைப்பொழிவு, இறுதி இரவு உணவு, போதனைகள், புதுமைகள், பாடுகள், மரணம், மரித்த ஏசுவின் இறுதி ஊர்வலம் உள்ளிட்ட உள்ளத்தை உருக்கும் காட்சிகள் நடைபெற்றது. இதையடுத்து வாணவேடிக்கைகள் முழங்க வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று சப்பர பவனி வீதி உலா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணியளவில் ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்காவும் அதனைத்தொடர்ந்து அவர் இங்கே இல்லை அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்ற தலைப்பில் மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தை செலஸ்டின் மறையுரையாற்றினார்.
தேரோட்டம்
விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 8.30 மணியளவில் திருச்சி மறைமாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு திருவிழா சிறப்பு திருப்பலியாற்றினர். பின்னர் மதியம் 1.30 மணியளவில் உயிர்த்த ஆண்டவரின் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதைமுன்னிட்டு ஆலயத்திலிருந்து உயிர்த்த ஆண்டவரின் சொரூபத்தை ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து தமிழ்நாட்டிலேயே மூன்றாவது பெரிய தேரான வண்ண மலர்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயர தேரில் வைத்தனர்.
அதேபோல சம்மனசு, மாதா ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்ட 2 சிறிய தேர்கள் தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து திருச்சி புனித தெரசாள் ஆலய பங்குத்தந்தை அன்புராஜ் தேரை புனிதம் செய்து அர்ச்சித்து வைத்தார். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் பச்சைக் கொடியை காட்டி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து பக்தர்கள் 3 தேரையும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் தேரோடும் 4 வீதிகளின் வழியாக அசைந்தாடி சென்று மதியம் 2.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
அன்னதானம், நீர்மோர்
தேரோட்டத்தில் திருச்சி, விராலிமலை, கீரனூர், மாத்தூர், மண்டையூர், நாகமங்கலம், இலுப்பூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் தலைமையில் ஊர் நிர்வாகக்குழு தலைவர் செபஸ்தியான் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.