மதுரை சின்னப்பட்டி கிராமத்திற்கு தேசிய அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருது

மதுரை சின்னப்பட்டி கிராமத்திற்கு தேசிய அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருது கிடைத்துள்ளது.

Update: 2022-04-24 16:55 GMT
மதுரை, 
மதுரை சின்னப்பட்டி கிராமத்திற்கு தேசிய அளவில் சிறந்த ஊராட்சிக்கான விருது கிடைத்துள்ளது.
கிராம சபை கூட்டம்
பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னபட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அனிஷ் சேகர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கிராமங்களில் எடுக்கப்படும் முக்கியமான முடிவுகள் அனைத்தும் அங்கு நடைபெறும் கிராம சபையில் தான் விவாதித்து முடிவு செய்யப்படும். ஏனெனில் கிராமத்தி னுடைய உயர்மட்ட குழுவே கிராம சபைதான்.
 தேசிய அளவிலான பஞ்சாயத்து விருது சின்னப்பட்டி ஊராட்சிக்கு கிடைத்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சி யாகவும், பெருமையாகவும் இருக்கிறது. 
விருது
கிராம சபை உறுப்பினர்களுடைய அனைவரது முழு பங்களிப்பினால் தான் இந்த விருதினை பெற முடிந்தது. இந்த விருதினை முதல்-அமைச்சர், ஊராட்சி தலைவரிடம் வழங்குவார். வழக்கமாக ஆண்டுக்கு 4 நாட்கள் கிராம சபை கூட்டமானது நடைபெறும். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை நடைபெறுகிறது. சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது கிராம நிர்வாகம் தான்.
அதனால் கிராம நிர்வாகம் எந்தஅளவிற்கு சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அளவிற்கு மக்களனைவரும் பயன்பெறுவர். கிராம நிர்வாகத்தின் திறமைகளை வளர்க்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.
கொரோனா அலை
முதல்-அமைச்சர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி உள்ளார்கள்.ஒவ்வொரு கிராமத்தினுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டு உள்ளார்கள். வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு கலைஞரின் வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்றின் பிடியில் இருந்து படிப்படியாக மீண்டுவரும் வேளையில் கொரோனா நோய்த் தொற்றின் அடுத்த அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். 
பாதுகாப்பு
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் சிறப்பு தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளையில் தொற்றா நோய்களாகிய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் சின்னபட்டி ஊராட்சி தலைவர் சக்தி மயில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் அருள்மணி, திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் காளிதாசன், அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .செல்லதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்