கடன் கொடுப்பதாக கூறி, பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய 4 பேர் கைது
பெங்களூருவில் கடன் கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
பெங்களூரு: பெங்களூருவில் கடன் கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடன் கொடுப்பதாக மோசடி
பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அந்த நபரை சமீபத்தில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர்கள், தொழில் தொடங்குவதற்காக ரூ.20 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக கூறினார்கள். இதனை நம்பிய அவரும் கடன் வாங்க சம்மதித்தார். இதையடுத்து, கடன் கொடுக்கும் முன்பாக, அதற்கான ஆவணங்கள் மற்றும் முன்பணம் செலுத்த வேண்டும் என்று மா்மநபர்கள் கூறினார்கள்.
இதையடுத்து, குறிப்பிட்ட இடைவெளியில் அந்த நபரிடம் இருந்து, மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் வரை வாங்கி கொண்டனர். பின்னர் ரூ.20 லட்சம் கடன் கொடுக்காமல் மர்மநபர்கள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து மோசடி செய்து விட்டார்கள். இதுகுறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில், வடகிழக்கு மண்டல போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மோசடி தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் சதீஸ் (வயது 24), உதய் (29), ஜெயராம் (33), வினய் (26) என்று தெரிந்தது. இவர்கள் 4 பேரும், ஆன்லைன் மூலமாக பொதுமக்களை தொடர்பு கொண்டு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக கூறுவார்கள்.
கடன் வாங்க விரும்பும் நபர்களிடம் இருந்து முன்பணத்தை பெற்றுக் கொண்டு, கடனை கொடுக்காமல் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
ஏராளமான பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாயை 4 பேரும் மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கைதான 4 பேரிடம் இருந்து ரூ.1½ லட்சம், 4 செல்போன்கள், 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.