பெங்களூருவில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் சாகசம்; 3 மாதத்தில் 9,659 வழக்குகள் பதிவு
பெங்களூருவில் போலீஸ் தடை போட்டாலும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 9,659 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
மோட்டார் சைக்கிள்களில் சாகசம்
பெங்களூரு நகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இவ்வாறு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனால் பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் சாகசம் செய்யும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வாலிபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்வதன் மூலம், அதே சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும் தங்கள் மீது மோதி விடுவார்களோ? என்ற பயத்திலேயே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு வாலிபர்கள் உயிர் பலி ஆகும் விபரீதங்களும் நடக்கிறது.
புறநகர் பகுதி சாலைகள்
எல்லாவற்றுக்கும் மேலாக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் வாலிபர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது எதிர்பாராத விதமாக மோதி விடுவதால், அவர்களுக்கும் காயம் ஏற்படுகிறது. மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்களே என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து சாகசங்களில் ஈடுபடுவதை கைவிடுவதில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெங்களூரு புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது தெரியவந்துள்ளது. அதாவது நைஸ் ரோடு, வெளிவட்ட சாலையில் தான் வாலிபர்கள் கும்பலாக சேர்ந்து சாகசத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை தான் இந்த சாகசம் அதிகளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருட்டு மோட்டார் சைக்கிள்களில்...
கோரி பாளையா பகுதியில் சமீபத்தில் சாகசம் செய்த போது மோட்டார் சைக்கிள் மோதி ஒரு பெண் படுகாயம் அடைந்திருந்தார்.பெங்களூரு புறநகர் பகுதிகளை தவிர்த்து பாதராயனபுரா, எலெக்ட்ரானிக் சிட்டி, துமகூரு ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் சாகசம் செய்து வருவது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மோட்டார்சைக்கிளில் சாகசம் செய்வதற்காக சில வாலிபர்கள், மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று நகரின் முக்கிய சாலைகளில் சாகசங்களை செய்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் போலீசாா் தெரிவித்துள்ளனர்.
9,659 வழக்குகள் பதிவு
இந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாகசங்கள் செய்வது, கண்மூடித்தனமாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி, பெங்களூருவில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சாகசம் செய்தல், அதிவேகம், பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்ததாக 9 ஆயிரத்து 659 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்யபவர்களை கண்காணிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
பெங்களூருவில் தொடர்ந்து அரங்கேறி வரும் மோட்டார் சைக்கிள்கள் சாகசம் குறித்து போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் சாந்தராஜ் கூறுகையில், பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றி போலீசாருக்கு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் தகவல் தெரிவிக்கலாம். யாராவது இதுபோன்று சாகசத்தில் ஈடுபட்டால், அதனை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அனுப்பலாம்.
சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாருக்கு தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அபாயகரமாக வாகனங்களை ஓட்டி செல்பவர்கள், சாகசங்கள் செய்து, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு கொடுப்பவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.