தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
ஆரல்வாய்மொழி:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நாகர்கோவில் வரும் வழியில் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் மீனா நாகர்கோவிலில் உயர் அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றிருந்தார். இதனால் சைலேந்திரபாபுவை அங்கிருந்த போலீசார் வரவேற்றனர். பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விபத்து வாகனங்களை ைசலேந்திரபாபு பார்வையிட்டதோடு, வழக்கை துரிதமாக முடித்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர், போலீஸ் நிலையத்தை சுற்றி பார்த்து விட்டு நிலைய வருகை பதிவேடு, குற்ற சம்பவ பதிவேடு, முதல் தகவல் அறிக்கை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் போலீஸ் நிலையத்தில் உள்ள கோப்புகளை சிறந்த முறையில் பராமரித்ததாக போலீஸ் ஏட்டு எழுத்தர் செந்திலை வெகுவாக பாராட்டியதோடு அவருக்கு ரூ.5 ஆயிரத்தை வெகுமதியாக வழங்கினார்.
இந்த ஆய்வின்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி, தலைமை காவலர் அகில் ஆகியோர் உடனிருந்தனர்.