ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஊர்வலம்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.
கம்பம்:
கம்பம் காந்தி சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மத்திய மாநில, அரசுகள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க கோரி சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மோகன், பன்னீர்வேலு, அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில பொருளாளர் டாக்டர் எஸ்.முருகன் கலந்து கொண்டு சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கம்பத்தில் தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, மார்க்கையன்கோட்டை சின்னமனூர், தேனி, ஆண்டிப்பட்டி, வைகை அணை வழியாக பெரியகுளத்தில் நிறைவு செய்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தேனி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளிக்கும் வகையில் தொழிற்சாலை உருவாக்கிட வேண்டும் என கோரிக்கை கோஷங்களை முழங்கியவாறு சென்றனர்.