இந்து மகா சபா மாநில தலைவர் கைது

புதுக்கடை அருகே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து மகா சபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-23 19:13 GMT
குழித்துறை:
புதுக்கடை அருகே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து மகா சபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சர்ச்சை பேச்சு
இந்து மகா சபா அகில இந்திய துணை தலைவராகவும், மாநில தலைவராகவும் இருப்பவர் தா. பாலசுப்பிரமணியன். இவர் புதுக்கடை அருகே காப்புக்காடு என்ற இடத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பிற மதம் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. 
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் புதுக்கடை ேபாலீசாருக்கு உத்தரவிட்டார். புதுக்கடை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் அருகே உள்ள ஈத்தாமொழி தோப்பன்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து அவரை புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 
மருத்துவ பரிசோதனை
பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து மகா சபா தொண்டர்கள் குழித்துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்  ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். 
அவர்கள் தொண்டர்களை ஆஸ்பத்திரிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அத்துடன் தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டில் ஆஜர்
மருத்துவ பரிசோதனை முடித்த பின்பு பாலசுப்பிரமணியனை போலீசார் அழைத்து சென்று குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதையொட்டி ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான ேபாலீசார் குவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்