தஞ்சையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு கிலோ ரூ.45-க்கு விற்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கிலோ ரூ.45-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் மீண்டும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கிலோ ரூ.45-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காமராஜர் மார்க்கெட்
தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே தற்காலிக காமராஜர் மார்க்கெட் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியும், ஒடிசா உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதே போல் தக்காளி தஞ்சை மார்க்கெட்டுக்கு ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஒரு நாளைக்கு 100 டன் வீதம் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
தக்காளி விலை அதிகரிப்பு
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி தஞ்சையில் கிலோ ரூ.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. பருவம் தவறி பெய்த மழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து இல்லாததால் விலை அதிகரிக்க தொடங்கியது. அதன் பின்னர் குறைந்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 4 கிலோ ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது தக்காளி விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று 1 கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டது. முதல்தர தக்காளி கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தக்காளி விலை தொடர்ந்து அதிரிக்க தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை அதிகரித்துள்ளதால் மக்களும் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “தஞ்சை மார்க்கெட்டுக்கு தினமும் 100 டன் தக்காளி விற்பனைக்கு வரும். இதே போல் தஞ்சையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். தற்போது தமிழகத்தில் இருந்து தக்காளி வரத்து அடியோடு நின்று விட்டது. தற்போது ஆந்திராவில் இருந்து மட்டும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
40 டன் வரத்து
இதனால் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தஞ்சைக்கு தற்போது 40 டன் அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதனால் இன்னும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது”என்றனர்.