ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 25 பேர் காயம்
கந்தர்வகோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர்.
கந்தர்வகோட்டை,
ஜல்லிக்கட்டு
கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நொண்டி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதையொட்டி கோவில் முன்பு வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தன. காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. அதன்பின்னர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
இதையடுத்து ஆர்.டி.ஓ. கருணாகரன், தாசில்தார் புவியரசன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து களத்தில் நின்று ஆட்டம் காட்டியது.
ஆவேசத்துடன் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கிவீசி பந்தாடியது. திமிறிய காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஒரு சில காளைகள் சுற்றி சுழன்று வீரர்களை பந்தாடியது.
25 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. இதில் 275 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என 25 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு ஏற்கனவே தயார்நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஜல்லிக்கட்டை கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டு களித்தனர். மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு லில்லி கிரேஸ், இ்ன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.