சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஐஸ் வியாபாரி கைது
விழுப்புரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற ஐஸ் வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள தொந்திரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சிவக்குமார் (வயது 47). இவர் சைக்கிளில் சென்று ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் அதே பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்தார். அப்போது அங்குள்ள தெருவில் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சிவக்குமார், அந்த சிறுமியிடம் தனது வீட்டிற்குள் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிறுமியும் விவரம் அறியாமல் தனக்கு ஐஸ்கிரீம்தான் தரப்போகிறார் என நினைத்து அவரது வீட்டிற்குள் சென்றாள். அந்த சமயத்தில் அந்த சிறுமியிடம் சிவக்குமார் தவறாக நடக்க முயன்றார். உடனே அந்த சிறுமி அங்கிருந்து வெளியே ஓடி வந்து இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.