விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-23 17:23 GMT
விழுப்புரம், 

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45) விவசாயி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர் ஒருவரின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா கணியாம்பூண்டியை சேர்ந்த கோவிந்த் மகன் கந்தன் (51) என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கந்தன், ஏழுமலையிடம் சென்று தனது குடும்ப செலவிற்காகவும், தன்னுடைய மகன் ராகவேந்தரின் (22) படிப்பு செலவிற்காகவும் ரூ.10 லட்சம் கடன் தரும்படி கேட்டுள்ளார். இதை நம்பிய ஏழுமலை, 2 தவணையாக ரூ.10 லட்சத்தை கந்தனிடம் கொடுத்துள்ளார். கடன் தொகையை பெற்ற கந்தன், 3 ஆண்டுகள் ஆகியும் அந்த கடன் தொகையை திருப்பி கொடுக்காமல் ஏழுமலையை ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கந்தன், ராகவேந்தர் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று கீழ்பெண்ணாத்தூரில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற கந்தனை விழுப்புரம் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் ராகவேந்தரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்