கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையினால், வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Update: 2022-04-23 17:07 GMT
கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழையின்போது, டர்னர்புரம் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் உரசியதில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மேலும் அந்த பகுதியில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.  

இந்தநிலையில் நேற்று காலையில் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்தது. அதன்பிறகு பகலில் வெப்பமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணி முதல் 2 மணி நேரம் இடி-மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாயுடுபுரம் பகுதியில் இருந்து பெரும்பள்ளம் செல்லும் சாலை சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதனிடையே நட்சத்திர ஏரி நிரம்பி, அதிக உபரி நீர் வெளியேறி வருவதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்தனர்.

 வார விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேநேரத்தில் பலத்த மழை காரணமாக பயணிகள் வாகனங்களிலும், அறைகளிலும் முடங்கினர். 

மழையினை தொடர்ந்து கடும் குளிர் நிலவியதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை அப்சர்வேட்டரியில் 40 மில்லி மீட்டரும், போட்கிளப்பில் 47 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்