ரூ8 லட்சம் கடனை தராததால் கடத்தப்பட்ட மருந்து கடைக்காரர் பழனிக்கு தப்பி சென்றது அம்பலம் மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ரூ.8 லட்சம் கடனை தராததால் கடத்தப்பட்ட மருந்து கடைக்காரர் பழனிக்கு தப்பி சென்றது அம்பலமானது. இதுதொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி ஐந்தாலமரம் பகுதியை சேர்ந்தவர் ரவி என்கிற சண்முகம் (வயது 40). இவர் சேலம் அழகாபுரத்தில் மருந்து கடை வைத்து இருந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த யூகேஷ் (36) என்பவரிடம் ரூ.8 லட்சம் கடன் வாங்கினார். இந்த நிலையில் ரவி மருந்து கடையை மூடி விட்டு சொந்த ஊரான ஐந்தாலமரம் பகுதிக்கு சென்று விட்டார். பணத்தை கேட்டபோது தர மறுத்ததால் யூகேஷ் தனது கூட்டாளிகளுடன் அங்கு சென்று ரவியை காரில் கடத்தி சென்று சேலத்தில் சொகுசு பங்களாவில் அடைந்தார். இது குறித்து ரவியின் தந்தை செம்பாகவுண்டர் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரவியை கடத்திய யூகேஷ், சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த அஜித்குமார் (32) ஆகிய 2 பேரை கைது செய்து போச்சம்பள்ளி அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் சேலத்திற்கு கடத்தப்பட்ட ரவி கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி பழனிக்கு சென்றார். அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு தான் பழனிக்கு தப்பி சென்று விட்டதாகவும், தன்னை கடத்திய விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த அர்ஜூனன், கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.